சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட, ‘சமூக ஊடக சிறப்பு மையம்’ அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் நீதி நிர்வாகத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > சட்டம் – ஒழுங்கைத் திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக தமிழகம் ஓர் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு இந்த அரசு தீவிர முயற்சிகள் எடுத்துவருகின்றது.

வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட, சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும்ஏற்படுத்தப்படும்.

> இந்த வகையில், சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட, “சமூக ஊடக சிறப்பு மையம்” அமைக்கப்படும்.

இம்மதிப்பீடுகளில் காவல் துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தீ விபத்துகளைத் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டில், இத்துறை மொத்தமாக 16,809 தீ விபத்து அழைப்புகள் மற்றும் 57,451 மீட்புப்பணி அழைப்புகளை ஏற்று, எண்ணற்ற மனித உயிர்களையும், கால்நடை மற்றும் உடைமைகளையும் காப்பாற்றியுள்ளது.

இம்மதிப்பீட்டில்தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

> வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீர்ப்புகளை வழங்கிட, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைத்திட, இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இம்மதிப்பீட்டில்நீதிநிருவாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.