காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை விசைத்தறியில் நெய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக செய்யாறு பகுதி காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், மதிப்புமிக்க காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் கைத்தறியில் நெய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர். உலகின் பழமையான தொழில்களில் ஒன்றாக நெசவுத் தொழில் இருந்து வருகிறது. ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்ற முதுமொழி வாக்கின் மூலம் இந்த தொழிலின் முக்கியத்துவத்தை உணரலாம்.

நெசவுத் தொழிலில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மிக உயர்ந்த இடத்தில் பட்டு நெசவுத் தொழில் இருந்து வருகிறது. செல்வந்தர்கள் பட்டாடை அடையாளமாகவும், பட்டுப் புடவை உடுத்துவது கவுரவமாகவும் கருதப்படுவது இன்றும் தொடர்கிறது. இந்துக்களின் திருமணம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்களில் பட்டுப் புடவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிலும், காஞ்சிபுரம் பட்டுக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

கைத்தறி பட்டு நெசவுதான் காஞ்சிபுரம் பட்டின் சிறப்பாக கருதப்படுகிறது. இதற்காகவே, காஞ்சிபுரம் பட்டுக்கு புவிசார் குறியீடும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவு தொழிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

காஞ்சிபுரத்தை கடந்து செய்யாறு சுற்றுவட்டாரங்களிலும் காஞ்சிபுரம் பட்டு நெசவு நெய்யும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். சமீப நாட்களாக விசைத்தறியில் பட்டு நெய்யப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கைத்தறி பட்டு நெசவாளர்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கம்பன் கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் கணேஷ் கூறும்போது, ‘‘செய்யாறு நகரம், ஆசனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு பட்டுப் புடவை தயாரிக்க 7 முதல் 10 நாட்களாகிறது. குடும்பமே இந்த வேலையில் ஈடுபடுவதால் பட்டு ரகங்களுக்கு ஏற்ப ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கூலி கிடைக்கிறது.

இதில், ஏதாவது குறைபாடு இருந்தால் கூலியில் குறைத்துக் கொள்வார்கள். எங்களுக்கு பட்டு ஜரிகை, நூல் கொடுக்கும் முதலாளிகள் விசைத் தறிகளை நாட ஆரம்பித்து விட்டனர். ஒரு விசைத்தறியில் 18 முதல் 60 சேலைகள் வரை நெய்ய முடியும். விசைத்தறியில் ஒரு நாளைக்கு 2 சேலைகளை நெய்ய முடியும். இதனால், உற்பத்தி அதிகமாகி விற்பனையும் செய்து அதிக லாபம் பார்க்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் பல முதலாளிகள் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியில் விசைத்தறி மூலம் மொத்தமாக பட்டு நெசவு நெய்து எடுத்து வந்து காஞ்சிபுரம் பட்டு என விற்பனை செய்கின்றனர். விசைத்தறியால் எங்களுக்கு பட்டு ஜரிகை, நூல் கொடுக்க முதலாளிகள் தயங்குகின்றனர். அரசு விதிகளின்படி காஞ்சிபுரம் பட்டு கைத்தறியில் தான் நெய்ய வேண்டும். அது மீறப்படுகிறது’’ என்றார்.

ஆரணி பகுதியிலும் கைத்தறி பட்டு நெசவு விசைத்தறியில் நெய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கடந்த ஒரு வாரம் முன்பாக மத்திய ஜவுளித்துறை பிராந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து சில விசைத்தறிக் கூடங்களுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். அதே போல், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை நெய்யும் விசைத் தறி கூடங்களுக்கும் ‘சீல்’ வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக கணேஷ் தொடர்ந்து கூறும்போது, ‘‘கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். விசைத்தறியால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. காஞ்சிபுரம் பட்டு நெசவு கைத்தறியில் நெய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டுவில் 40 சதவீதம் பாலியஸ்டர் சேர்க்கும் முடிவை கைவிட வேண்டும்’’ என்றார்.