ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

கடந்த அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி லட்சக்கணக்கில் பணம், நகை ஆகியவற்றை இழந்து வருகின்றனர். அவர்களில் பலர் பெருமளவில் கடனுக்கும் ஆளாகியுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அதுமட்டுமின்றி, கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை கேள்வி நேரம் தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்துப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.