தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன் நேற்று தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (வியாழக்கிழமை) சட்டப் பேரவையில் நடக்கும் கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தில் முதலாவதாக,

1. பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி முதல் கேள்வி கேட்டார். விமான நிலையத்திலிருந்து – வண்டலூர்வரை மெட்ரோ சேவை நீட்டிப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான திட்டம் ஆய்வில் உள்ளது என்று பதிலளித்தார்.

2. ஒட்டப்பிடாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என அதிமுக எம்எல்ஏ, என்.சி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ஒட்டப்பிடாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க தற்போது அவசியம் இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

3. மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

4. ஒசூரைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.

ஓசூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பதிலளித்தார்.

5. கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்கப்படுமா? என அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

இதற்கு தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட இடங்களில் சிப்காட் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தென்னரசு விளக்கம் அளித்தார்.