தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதியில் யாரும் சொல்லவில்லை என்றும் மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தப்பாட்ட கலைஞர் வேலு இல்லத் திருமண விழா இன்று(ஞாயிறு) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி., கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான். அது உறுதியான ஒன்று. அதிமுக பல திசைகளில் பிரிந்து கிடக்கிறது என்பது உண்மை தான். ஆனாலும், அதில் நிறைய பேர் ஆதாயம் தேட வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதிமுகவில் எல்லோரும் இடைத்தேர்தலில் இணைந்து வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்” என்றார்.

மேலும், தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை, மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பது தான் திமுகவின் வாக்குறுதி என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.