காலநிலைக்கு ஏற்ற கிராமங்கள் திட்டத்தின் கீழ் 11 சுற்றுலாத் தளங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டிடங்கள் சோலார் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 11 கிராமங்களை தேர்வு செய்து ‘காலநிலைக்கு ஏற்ற கிராமங்கள்’ (climate resilient villages ) ஆக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நாகை மாவட்டம் கோடியக்கரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தென்காசி மாவட்டம் குற்றலாம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், சேலம் மாவட்டம் ஏற்காடு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ளிட்ட 11 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

இதன்படி இந்த இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சோலார் மின்சாரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இங்கு இருக்கும் பகுதிகள் வனம் நிறைந்த பகுதிகளாக மாற்றப்படும். மேலும் இந்த நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.