கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக் கழிவுகள் சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டால், வெளி மாநிலங்களில் உள்ள அணுமின் கழிவுகளைக் கூட இங்கு சேமிக்கும் நிலை வரக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. இதனை ஆரம்பக் கட்டத்திலேயே எதிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு அலகுகள் இயங்கி வருகின்ற நிலையில், மூன்று மற்றும் நான்காவது அணு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதோடு, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு அலகுகள் அமைக்கவும் இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
கூடங்குளத்தில் தற்போது செயல்பட்டு வரும் இரண்டு அணு அலகுகளிலிருந்து உருவாகும் அணுக் கழிவுகள் அணு உலைக்குக் கீழேயே சேமிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான Away From Reactor மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அணு உலைக்கு கீழேயே அணுக் கழிவுகள் சேமிக்கப்படும்போது இருக்கும் பாதுகாப்பு அணு உலைக்கு வெளியே இருக்காது என்றும், இதன் காரணமாக கதிர்வீச்சு தண்ணீரிலும், காற்றிலும் பரவி பல விதமான நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாவார்கள் என்றும், இது மிகுந்த ஆபத்தானது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு அலகுகள் நடைமுறைக்கு வந்தபிறகு அதிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான Away From Reactor மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் இணையதளம் வழியாக இந்திய அணுசக்திக் கழகத்தால் வெளியிடப்பட்டு அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 24-02-2022 அன்று திறக்கப்படவுள்ளன. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடியது என்பது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும் செயலாகும்.
பொதுவாக, மக்கள் வசிக்காத இடங்களில், அணுஉலைக் கழிவுகள் ஆழமாகத் தோண்டப்பட்ட குழிகளில் போடப்படுவது நடைமுறை என்பதால், இதனைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கத்தை ஆழ்நில கழிவு மையமாக (Deep Geological Repository) மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘ஆழ்நில அணுக் கழிவு மையம் தேவையில்லை’ என்று மத்திய இணை அமைச்சர் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதிலிருந்து, அணுக் கழிவுகளை அணு உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான Away From Reactor மையத்தை அமைப்பதற்கான வாய்ப்பு வலுப் பெற்றுள்ளது. இதுபோன்ற மையம் அமைக்கப்படுமேயானால், வெளி மாநிலங்களில் உள்ள அணுமின் கழிவுகளைக் கூட இங்கு சேமிக்கும் நிலை வரக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. இதனை ஆரம்பக் கட்டத்திலேயே எதிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், இதுகுறித்து தமிழக அரசு மவுனம் சாதித்து வருவதைப் பார்த்தால், இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு பச்சைக் கொடி காட்டிவிட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து பெறப்படும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதோடு, மத்தியத் தொகுப்பிற்கும் 15 விழுக்காடு மின்சாரம் செல்கிறது. அணுமின் உலைகள் ஆபத்தானவை என்ற நிலையிலும், அணுமின் உலைகள் தமிழகத்தில் அமைந்திருக்கின்றன. இதன்மூலம் பிற மாநிலங்கள் பயனடைகின்றன. இந்தச் சூழ்நிலையில் அணுக் கழிவுகளை சேமிப்பதற்கான Away From Reactor மையத்தையோ அல்லது ஆழ்நில அணுக் கழிவு மையத்தையோ தமிழ்நாட்டிற்கு வெளியில் அமைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
மக்களுக்காகத் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல. எனவே, இந்திய அணுசக்திக் கழகம் Away From Reactor மையத்தை கூடங்குளத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரி இருப்பதையும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் வழங்கியிருப்பதையும் கருத்தில் கொண்டு, Away From Reactor மையம் கூடங்குளத்தில் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.