ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ‘ஜெய் பீம்’ படம் செல்லும் என்று பிரபல விமர்சகரும், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக்குலின் கோலே தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் சில மாதங்கள் முன் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளித்த படம் ‘ஜெய் பீம்’. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.

அதேபோல், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூ-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன.

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. நாளை இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகவுள்ளது,

இந்நிலையில் ஆஸ்கர் கமிட்டி சார்பில் பிப்ரவரி 8ல் ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலை ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவரான ஜாக்குலின் கோலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்வீட்டில் ‘நாளை காலை எந்த ஆஸ்கர் பரிந்துரை உங்களிடம் மிகப்பெரிய ரியாக்சனை ஏற்படுத்தும்’ என்று கேட்டிருந்தார். அவரது இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஜாக்குலின் கோலே ‘சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ‘ஜெய் பீம்’ – என்னை நம்புங்கள்” என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.