வாள் வீச்சு சி.ஏ.பவானி தேவி: ஒலிம்பிக் வாள்வீச்சில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை பவானி (27).  சென்னையை சேர்ந்த இவர் ஆசிய சாம்பியன்ஷிப்,  காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில்  வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.   
துப்பாக்கி சுடுதல்  இளவேனில் வாலறிவன்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் (21), இப்போது குஜராத் மாநில பிரிவில் வருகிறார். முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும்  இளவேனில்  10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் உலக கோப்பை தங்கம் வென்றவர்.  பங்கேற்ற 7 சர்வதேச போட்டிகளில் 6ல் தங்கமும், ஒன்றில் வெள்ளியும்  வென்றுள்ளார். ஒலிம்பிக்கில்  தனிநபர், கலப்பு குழு பிரிவிலும்  பங்கேற்கிறார்.

 டேபிள் டென்னிஸ் சத்யன் ஞானசேகரன்: சென்னையை சேர்ந்தவர் சத்யன் (28).  ஒலிம்பிக்சில் முதல்முறையாக  விளையாட உள்ளார். பெல்ஜியத்தில் 2016ல் நடந்த  ஐடிடிஎப்  சாலஞ்ச் தொடரில் தங்கம் வென்றவர். காமன்வெல்த்  போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறார்.
சரத் கமல்: சென்னையை சேர்ந்தவர். இவருக்கு இது 4வது ஒலிம்பிக்ஸ்.  இவரது தந்தை சீனிவாச ராவ் தான் இவருக்கு பயிற்சியாளர். காமன்வெல்த்,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்திருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளிலும் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டவர். இந்த முறை  ஒற்றையர் பிரிவில் மட்டும் களம் காண உள்ளார்.

பாய்மர படகு  பாய்மர படகு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 4 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  நேத்ரா குமணன்: சென்னையைச் சேர்ந்த நேத்ரா(23)  பி.டெக் பட்டதாரி. பாய்மர படகு விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல்  இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மகளிர் ‘லேசர் ரேடியல் ’ என்ற தனிநபர் பிரிவில் களம் காண உள்ளார்.  ஏற்கனவே ஆசிய விளையாட்டுப்போட்டி உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  விஷ்ணு சரவணன்: ராணுவ வீரரான விஷ்ணு (22) வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் முறையாக ஒலிம்பிக்சில் பங்கேற்கப் போகிறார். அவரது தந்தையும் முன்னாள் ராணுவ மேஜருமான ராமசந்திரன் சரவணன்தான்  விஷ்ணுவின் பயிற்சியாளர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் மகாராஷ்டிராவில்  வசிப்பதால் அந்த மாநில கணக்கில் வருகிறார். ஆடவர் லேசர் பிரிவில் பங்கேற்கும்  விஷ்ணு  உலக கோப்பை யு21 பிரிவில் வெண்கலம் வென்றவர்.   

  வருண் தாக்கர், செங்கப்பா கணபதி: இருவரும்  பாய்மரப் படகு விளையாட்டில் 49ஈஆர் இரட்டையர் பிரிவில் பங்கேற்கின்றனர். இருவரும் முதல்முறையாக ஒலம்பிக்கில் களம் காண்கின்றனர். கணபதி கோவையை  சேர்ந்தவர். சமீபத்தில் ஓமனில்  நடந்த  ஆசியா, ஆப்ரிக்கா ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் முதல் இடம் பிடித்தார். வருண்(26) சென்னையை சேர்ந்தவர். இவரும் ஓமனில் நடந்த  ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப்போட்டியில் கணபதியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்தார். இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.

  தடகளம்
  தடகள பிரிவில்  பங்கேற்க தமிழகத்திலிருந்து  தகுதி பெற்றுள்ள 5 பேரும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். கடும் உழைப்பு காரணமாக இப்போது ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 5 தடகள வீரர்கள் ஒரே நேரத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும்.    ராஜீவ் ஆரோக்கியம், நாகநாதன் பாண்டி: இருவரும்  ஆடவர் 4X100மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ளனர்.  இவர்களுடன்  கேரளாவைச் சேர்ந்த முகமது அனாஸ், டெல்லியைச் சேர்ந்த  அமோஸ் ஜேகப், நிர்மல் டோம் ஆகியோர் களம் காண உள்ளனர்.
திருச்சி லால்குடியை சேர்ந்தவர் ராஜீவ் (30). இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்.  பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து  போட்டிகளில் பங்கேற்று வரும்  ராஜீவ்,   ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர், கலப்பு  4X100மீ தொடர் ஓட்டங்களில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் உள்ள சிங்கம்புலியம்பட்டியை சேர்ந்தவர் நாகநாதன்(25).  தமிழக காவல்துறையில் பணியாற்றுகிறார். தேசிய அளவிலும், பெடரேஷன் கோப்பை தடகள போட்டிகளிலும்   400மீர், , 4X100மீ தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றுள்ளார். முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்.  தனலட்சுமி சேகர்: திருச்சி  மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.  தேசிய பெடரேஷன் கோப்பை போட்டியில்  100 மீட்டரை 11.39 விநாடிகளில்  கடந்து டூட்டீ சந்த்தின் சாதனையை முறியடித்தவர். அதேபோல்  200 மீட்டர் ஓட்டத்தில்  23.26 விநாடிகளில் கடந்து தங்க மங்கை பி.டி.உஷாவின் சாதனையை தகர்த்தவர். ஒலிம்பிக்கில் கலப்பு  4X100மீ தொடர் ஓட்டத்தில்  பங்கேற்க உள்ளார்.

  ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன்: ரேவதி,  சுபா  இருவரும்  முதல்முறையாக ஒலிம்பிக் கலப்பு 4X100 தொடர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.  இவர்களுடன்   ஓடும்  மற்ற 2 வீரர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்த அலெக்ஸ் ஆண்டனி,  மற்றவர் டெல்லியை சேர்ந்த சர்தக் பாம்ப்ரி.  மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி (23). சிறுவயதில் பெற்றோரை இழந்து தாய் வழிப்பாட்டியின் ஆதரவில் வளர்ந்தவர்.   தேசிய அளவிலான போட்டிகளில்  100மீ, 200மீ, 4X100மீ தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர். பிஏ பட்டதாரியான ரேவதி  தெற்கு ரயில்வேயில்  பணிபுரிகிறார்.  திருச்சி,  திருவெறும்பூர் அருகே பகவதிபுரத்தைச்  சேர்ந்தவர் சுபா (21).  தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பகதங்களை குவித்துள்ளார். இன்றும் பொருளாதார சிக்கலில் தவிக்கும் சுபாவுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Metro_People #olympics_2021_tamil_nadu_players #Olympics #Tokyo_Olympics #Olympics2021 #Tamil_Nadu #TamilNews #தங்கங்களுக்காககளமிறங்கும்தமிழக_சிங்கங்கள் #SportsNews #India #Players