“தமிழகத்தின் தனிக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
கடந்தாண்டு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் மாணவர்கள் துபாய்க்கு அழைத்து செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட 67 அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு செல்லும் மாணவர்கள் சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா மற்றும் கல்வித் தொடர்பான முக்கிய இடங்களை நேரில் கண்டு களிக்க உள்ளனர். பின்னர் வரும், 14-ம் தேதி அதிகாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்தடைகின்றனர்.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகம், தேசியக் கல்வி கொள்கையை பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, தற்போது தமிழகம் வந்து சென்ற மத்திய கல்வி அமைச்சரும் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதல்வர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் தமிழகத்திற்கென மாநிலக் கல்வி கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மேலும் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. அது வந்த பின்பு நாங்கள் எந்த கொள்கையை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என்றார் – ஜி.செல்லமுத்து