கண்வலிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கண்வலிக்கிழங்கு விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மருத்துவக்குணம் கொண்ட பயிர்களில் குளோரி லில்லி (விஞ்ஞான பெயர் குளோரியோசா சூப்பர்பா) மிகவும் முக்கியமான மருத்துவப் பயிராகும். இதனை செங்காந்தள் மலர் என்றும், கண்வலிக்கிழங்கு என்றும் அழைப்பார்கள். செங்காந்தள் மலரானது நமது மாநில மலராகும். தமிழ்நாட்டில் கண்வலிக்கிழங்கு சுமார் 5,100 எக்டேரில் திண்டுக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 3,985 டன் கண்வலிக்கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கண்வலிக்கிழங்கு விதையில், கொல்சிஸின் (Colchicin) எனும் மருத்துவக்குணம் கொண்ட வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால், புற்றுநோய், வாதம், வீக்கம் போன்ற நோய்க்கான மருந்து தயாரிப்பிலும், பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிக்கான மருந்துகள் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுவதாக அறிவியல் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விதைகளிலிருந்து கிடைக்கக்கூடிய வேதிப்பொருள் மருந்து தயாரிப்புக்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கண்வலிக்கிழங்கு விதைகள் வடமாநிலங்களிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்தகைய தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கண்வலிக்கிழங்கு விதைகளுக்கு உரிய விலையை விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்குவதில்லை என்றும், இதனால், கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்வலிக்கிழங்கு விதைகளுக்கு சந்தை நிலவரப்படி உரிய விலையினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல ஆண்டுகளாக இவ்விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விதமான விளைபொருட்களுக்கும் இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த ஓராண்டில் எடுத்து வருகிறார்கள். அதுபோன்று, இக்கண்வலிக்கிழங்கு விதைகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஒன்றிய அரசின் வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு கடந்த 12ம் தேதி கடிதம் மூலம் ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளரை கோரியுள்ளது.

கடந்த 14ம் தேதி அன்று பெங்களூரில் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட அனைத்து மாநில வேளாண்துறை அமைச்சர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சரிடம் நேரில் கண்வலிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பான கோரிக்கையினை வலியுறுத்தி கடிதத்தினை அளிக்கப்பட்டுள்ளது.

நெல், உளுந்து, துவரை போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது போல், தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று, கண்வலிக்கிழங்கு விதைகளுக்கும் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையினை விரைவில் நிர்ணயிக்கும்பட்சத்தில், கண்வலிக்கிழங்கு விதைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளையும், தமிழக விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அரசின் மேற்பார்வையில் தமிழகத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என்று அதில் கூறப்பட்டள்ளது.