பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் கட்டப்பட்ட முகப்பு மண்டபம் இடிக்க உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காரைக்காலில் இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் கைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்த, பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் பகுதியில் முகப்பு மண்டபம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு, சில காரணங்களால் தடைப்பட்டுப் போனது. இப்பணியை கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி பூமி பூஜையுடன் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மீண்டும் தொடங்கிவைத்தார். சுமார் ரூ.25 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இதனிடையே, பொது இடத்தை ஆக்கிரமித்து இந்த மண்டபம் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 18ம் தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கட்டப்பட்டு வரும் முகப்பு மண்டபத்தை 28ம் தேதிக்குள் இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் நேற்று (மார்ச் 22) இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுப்பக்கட்ட முடிவு குறித்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: “நீதிமன்றம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் அவசரகதியில் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது” என கூறினர்.
இதனிடையே, இந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இன்று காரைக்காலில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ள. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பாரதியார் சாலை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அரசு, தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்கள் வழங்கம் போல் இயக்கப்படுகின்றன.