யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு ஜூலை முதல் மீண்டும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபலா டி சில்வா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வடக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் மீண்டும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும். இதன்மூலம், நாட்டின் சுற்றுலாத் துறை வளர்ச்சி பெறும். பொருளாதார சரிவிலிருந்து நாடு மீண்டு எழுவதற்கு உருதுணையாக இருக்கும்.
இலங்கை சுற்றுலாத் துறை இந்த ஆண்டு 8 லட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தற்போது 75 இருக்கைகள் கொண்ட விமானத்தை மட்டுமே யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரையிறக்க முடியும். எனவே, ஓடுபாதையை விரிவுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தேவையான உதவிகளைச் செய்யும் என்ரு நம்புகிறேன் என்றார் நிமல் சிறிபலா டி சில்வா.

கடந்த 2019ம் ஆண்டு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு முதல் விமான சேவை தொடங்கியது. எனினும், சில காரணங்களால் இந்த சேவை தடைபட்டிருந்தது. தற்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதன்மூலம், கொழும்பு செல்லாமல் நேரடியாக யாழ்ப்பாணத்துக்குச் சென்று வடமாகாணங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க முடியும். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பால் முதல் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.