தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் இழப்பை 100 சதவீதம் அரசே ஏற்க, ரூ.13,108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.19,297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, இதுவரை 75,825 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகளும் இந்த நிதியாண்டுக்குள் வழங்கப்படும். மின்னக மையத்தின் மூலம், மின் நுகர்வு தொடர்பாக மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6 லட்சத்து 77,838 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை கவலைக்குரியதாக உள்ளது. நடப்பு ஆண்டில் (2021-22) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பை 100 சதவீதம் அரசே ஏற்க, ரூ.13,108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு அரசு வழங்கும் மின்கட்டண மானியத்தை ஈடுசெய்வதற்காக, கூடுதலாக ரூ.9,379 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் எரிசக்தித் துறைக்கு ரூ.19,297.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.