வருமான வரி தினத்தையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையொன்றில், நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்தும் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் பாராட்டியிருந்தார். மேலும், அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவுறுத்தல் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

நேரடி வரிவிதிப்பு முறையின் பாதுகாப்புச் சுவராக மாதாந்திர ஊதியம் பெறுபவர்களே இருக்கிறார்கள். கடந்த நிதியாண்டில், கார்ப்பரேட் வரி வசூல் முற்றிலுமாகச் சீர்குலைந்து போனாலும், வருமான வரி வசூல் நிலையாகவே இருந்தது. தனிநபர் வருமான வரி மட்டும் ரூ.4.71 லட்சம் கோடி வசூலானது. இந்த நூற்றாண்டிலேயே கடந்த நிதியாண்டில்தான் முதன்முறையாக கார்ப்பரேட் வரிகளைக் காட்டிலும் தனிநபர் வருமான வரி அதிகமாக வசூலாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் 6.54 கோடிப் பேர் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல்செய்தனர். இந்தியாவில் வயதுவந்தோர் எண்ணிக்கையில் இவர்களது விகிதம் 10%-க்கும் குறைவானதாகும். கணக்கு தாக்கல் செய்பவர்கள் அனைவருமே வரி செலுத்துபவர்களும் இல்லை. தணிக்கை, சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுதந்திரமாகத் தொழில்செய்யும் பிரிவினரின் வரிப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பெருவணிகர்கள் தங்களது வருமானத்தைக் குறைவாகக் காட்டவே விரும்புகின்றனர். எனவே, இந்தியாவில் தனிநபர் வருமான வரி என்பது பெரிதும் மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினரையே குறிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here