நீட் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆளுநருக்கு எதிரான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை நுழைவாயிலில் இரும்புத் தடுப்பு வேலிகள் போடப்பட்டு, யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் யார்? போராட்ட அறிவிப்பை வெளியிடுபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? எந்த வகையான போராட்டத்துக்கு வியூகம் வகுக்கிறார்கள், அதில், எத்தனை பேர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீஸார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

தடையை மீறி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தினால், அவர்களை அப்புறப்படுத்தவும் போலீஸார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் ஆளுநர்மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.