சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டம், முதல்கட்டம் நீட்டிப்புக்கு பிறகு, சென்னை விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரம் – சிறுசேரி வரை 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்திலும் செயல்படுத்தப்படுகின்றன.
கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரை அமைக்கப்படும் 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரையும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தை திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரையும் நீட்டிப்பது தொடர்பாகவும், மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
வடசென்னையில் மாதவரம் பால்பண்ணை, மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட சில பகுதிகள் இடம்பெறுகின்றன. அதேநேரத்தில், மக்கள் அடர்த்தி அதிகமுள்ள வியாசர்பாடி பகுதியில் மெட்ரோ ரயில் சேவை இல்லை. வியாசர்பாடியைச் சுற்றி எழில் நகர், முல்லைநகர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதிநகர் உட்பட பல பகுதிகள் உள்ளன. எனவே, இந்தப்பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிட வேண்டும்.
செங்குன்றம்-அம்பத்தூர் மார்க்கத்திலோ செங்குன்றம்- வியாசர்பாடி வழியாகவோ எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தினால், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில், மூலக்கடையில் இருந்து வியாசர்பாடிக்கும், மூலக்கடையில் இருந்து செங்குன்றத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, “இரண்டாம் கட்டமெட்ரோ ரயில்திட்டம் தற்போது 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்கள் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப மெட்ரோ ரயில் புதிய வழித்தடம், வழித்தடம் நீட்டிப்புக்கு திட்டமிடப்படும்” என்றனர்.