வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 11 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் 37வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் ஆரத் தழுவி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை இதுவரை எவ்வித சிறு சலசலப்பும் கூட இல்லாமல் அமைதியாக நடைபெற்று வருகிறது.