மே.இ.தீவுகளில் நடந்து வரும் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மே.இ.தீவுகளில் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியையும் வென்றது.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், வீரர்களுக்கு ரேபிட்-கரோனா பரிசோதனையும், அதில் பாஸிட்டிவ் இருந்தால், பிசிஆர் பரிசோதனையும் செய்யப்படும். இந்திய வீரர்களுக்கு நேற்றையபோட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆன்ட்டி ரேபிட் பரிசோதனையில் கேப்டன் யாஷ் துல், துணைக் கேப்டன், எஸ்.கே.ரஷீத், கர்நாடக வீரர்அஸ்வின் கவுதம், ஹரியானா வீரர் கர்வ் சங்வான் ஆகியோருக்கு ரேபிட் டெஸ்டில் பாசிட்டிவ் வந்தது. மற்றொரு வீரர் சித்தார்த் என்பவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியானதால், அடுத்துவரும் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது

இது தவிர கேப்டன் துல், துணைக் கேப்டன் ரஷித், சங்வான், ஆகியோருக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதியானது. வாசு வாட்ஸ், மனவ் பராக் ஆகியோருக்கு ரேபிட் டெஸ்டில் நெகட்டிவ் வந்தது, இருப்பினும் இருவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுவரும்வரை தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “ 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்றுவரும் இந்திய அணியில் 6 பேர் கரோனா காரணமாக தேர்வு செய்யப்படவில்லை, எஞ்சியுள்ள 11 பேர் மட்டுமே விளையாடுகிறார்கள். வீரர்கள் மட்டுமல்லாது, பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உடல்நிலை குறித்து தொடர்ந்து வாரியம் கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது