உத்தர பிரதேச மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜக மீண்டும் வெற்றி பெறுவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்று 6-வது கட்ட தேர்தல் நடந்தது. 7-வது கட்ட தேர்தல் நடக்க இருக்கும் ஜான்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேசம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஊழல் ஒழிக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி ‘மாபியாவாடி’ ஆட்சியாக இருந்தது. மாபியாக்கள் இல்லாத ஜான்பூரை உறுதி செய்ய பாஜக அரசு தேவைப்படுகிறது.

பாஜக ஆட்சியில் மாநிலம் தொழில்வளர்ச்சி பெற்றுள்ளது. மருத்துவத்துறை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. உத்தர பிரதேச மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது அவசியம். எனவே மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். பாஜகவுக்கு சாதகமாகவே மக்கள் வாக்களிக்கின்றனர். 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல பாஜக மீண்டும் வெற்றிபெறுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.