நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றி வரும் நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது. திண்டுக்கல், கரூர், நெல்லை, சிவகாசி மாநகராட்சிகளில் பெரும்பான்மையைத் தாண்டி முன்னிலை நிலவரம் செல்வதால் இங்கெல்லாம் மாநகராட்சிகள் திமுக வசமாகின்றன.

நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதே போல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. பெருவாரியான இடங்களில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மற்றும் எம்.பி தயாநிதி மாறன், மற்றும் இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதை சென்னை அண்ணா அறிவாலயத்திலும் அக்கட்சியின் தொண்டர்கள் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.