ஒமைக்ரானின் சப்-வேரியன்ட்ஸ்களான BA.4 மற்றும் BA.5 அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. தற்போது BA.2.75 என்று அழைக்கப்படும் மற்றொரு வீரியமுள்ள ஒமைக்ரான் சப்-வேரியன்ட் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வேரியன்ட் குறித்து உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலிய சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த புதிய வேரியன்ட் இயற்கையிலேயே “ஆபத்தானதாக” இருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஒமைக்ரானின் புதிய சப்-வேரியன்ட்டாக குறிப்பிடப்படும் BA.2.75, இந்தியாவில் சுமார் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), நாட்டில் இதன் பரவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த புதிய சப்-வேரியன்ட் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், சுகாதார நிபுணர்கள் இதை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளனர்.

BA.2.75 இதுவரை 8 நாடுகளில் சுமார் 85 பேரை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 69 பேர் அடங்குவர். டெல்லி (1), ஹரியானா (6), இமாச்சலப் பிரதேசம் (3), ஜம்மு (1), கர்நாடகா (10), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (27), தெலங்கானா (2), உத்தரப் பிரதேசம் (1), மற்றும் மேற்கு வங்கம் (13) உள்ளிட்ட மாநிலங்களில் BA.2.75 கண்டறியப்பட்டுள்ளது. தவிர ஜப்பான் (1), ஜெர்மனி (2), இங்கிலாந்து (6), கனடா (2), அமெரிக்கா (2), ஆஸ்திரேலியா (1), மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த சப்-வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பை ஏற்படுத்துமா?

BA.2.75-ஐ பொறுத்தவரை இது வரவிருக்கும் போக்கை குறிக்கலாம் என்பதால் இதை ஒரு தீவிர சப்-வேரியன்ட்டாக மாறக்கூடும் என்ற கவலை நிபுணர்களிடையே உள்ளது. ஏனென்றால் சமீப மாதங்களில், ஸ்பைக் புரதத்தின் S1 பிரிவில் உள்ள பிறழ்வுகளுடன், BA.1, BA.2, BA.3, BA.4, BA.5 போன்ற ஒமைக்ரான் துணைப் பரம்பரைகளை அடிப்படையாக கொண்ட இரண்டாம் தலைமுறை வேரியன்ட்களின் பரவல் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் உயிரணுக்களுடன் இணைய மற்றும் உள்நுழைய வைரஸ் பயன்படுத்தும் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியில் குறிப்பாக பிறழ்வுகள் நடைபெறுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். BA.2.75 இப்போது தீவிர பாதிப்புகளுக்கு காரணமாகாவிட்டாலும் காலப்போக்கில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த கூடும்.

அதிகம் பரவி வரும் கோவிட் வேரியன்ட்கள்..

ஒமைக்ரானின் BA.4 மற்றும் BA.5 சப்-வேரியன்ட்கள் தென்னாப்பிரிக்காவில் கோவிட் பாதிப்புகள் அதிகரிக்க காரணமாக உள்ளது. மேலும் “ஸ்டெல்த் ஒமைக்ரான்” என்று அழைக்கப்படுவதை முந்தி, அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் BA.4 மற்றும் BA.5 சப்-வேரியன்ட்கள் இந்தியாவில் கோவிட் பாதிப்பை அதிகரிக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. BA.4 மற்றும் BA.5 ஆகியவை ஆபத்தானவை என்று கருதப்படவில்லை மற்றும் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

SARs-CoV-2 வைரஸ் லேசானதாகவும் மேலும் சமாளிக்கக்கூடியதாகவும் மாறியிருந்தாலும், புதிய வேரியன்ட்களுக்கு மத்தியில் விழிப்புணர்வாக இருப்பது முக்கியம். எனவே வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சரியான கை சுகாதாரத்தை பேணுங்கள். உங்கள் பூஸ்டர் ஷாட்டை சரியான நேரத்தில் பெறுங்கள்.