உதகை / கூடலூர்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து, நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆதிரா தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் இளம்பருதி தொடங்கிவைத்தார். விவசாய சங்கச் செயலாளர் யோகண்ணன், சிபிஐ (எம்) தாலுகா செயலாளர் நவீன்சந்திரன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், மாதர் சங்க தலைவர்கள் ஜெயலட்சுமி, பிரியா, பிரமிளா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஓய்வூதியதாரர்கள் சங்க தலைவர்கள் ராமன், கிருஷ்ணன் வாழ்த்தினர்.

60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும், ஒன்றிய அரசு உடனடியாக மணிப்பூர் பிரச்சினையில் தலையிட வேண்டும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மணிப்பூர் கலவரத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உதகை தாலுகா தலைவர் பானுமதி நன்றி கூறி, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். கூடலூரில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூடலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து காந்தி திடலில் பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. மணிப்பூர் கலவரத்துக்கு காரணமான பாஜக அரசு ராஜினாமா செய்ய வேண்டும், பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்.வாசு தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக சார்பில் பாண்டிய ராஜ், ராஜேந்திரன், நெடுஞ்செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.