வீராணம் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தாலும், ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்தாலும் ஏரிக்கு அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பைக் கருதியும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் வடிகால் மதகுகளான வெள்ளியங்கால் ஓடை மதகு, பூதங்குடியில் உள்ள விஎன்எஸ்எஸ் மதகு ஆகியவற்றின் வழியாக ஏரியின் தண்ணீரை வெளியேற்றினர்.

இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இன்று (டிச.18) ஏரி அதன் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

தற்போது கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 1500 கன தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 61 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாயப் பயன்பாட்டுக்கு விநாடிக்கு 165 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஏரி 3 முறை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.