சமீபத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரமின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்தார்.

விக்ரம் படத்தை கமலை வைத்து இயக்கி வருகிறார், லோகேஷ் கனகராஜ். அதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு குறித்து அவர் முக்கிய விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்குவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். படத்தின் அறிமுக டீஸர் ஒன்றும் வெளியிடப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் கமல் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. தேர்தல் முடிந்த உடனேயே மீண்டும் பட வேலைகள் ஆரம்பித்தன. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். புஷ்பா படப்பிடிப்பை முடித்த பின் விக்ரம் படப்பிடிப்பில் பகத் பாசிலும் இணைந்து கொண்டார். கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரமின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறியுள்ளார். கூவே கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி மூவரும் கலந்து கொண்டிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக தயாராகும் விக்ரமுக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு சண்டைக் காட்சியை அமைக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 2022 இல் படம் திரைக்கு வருகிறது.