கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பிக் பாஸ்’ ஷிவானி ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்துப் படக்குழுவினர் எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. சீரியல்களில் அறிமுகமாகி, பிக் பாஸ் நான்காம் சீசனில் பங்கேற்ற ஷிவானி நாராயணன் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பதாகவும், காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவரும் கலந்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் படக்குழுவினர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் ‘விக்ரம்’ படக்குழு வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.