மார்ச் 21 ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் ஆகிய கட்டண சேவைகள் நடைபெறாது.

திருப்பதியில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இம்மாதம் 21, 22 ஆகிய நாட்களில் ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு நாள் ஆன யுகாதி நாள் ஆகும். எனவே அன்றைய தினம் அதிகாலையில் கோவில் திறந்தபின் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை ஆகிய சேவைகள் நடத்தப்படும். அதனை தொடர்ந்து உற்சவர்கள் கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வர். அருகில் சேனை முதல்வரும் தனி பல்லக்கில் அங்கு

எழுந்தருள்வார். இதனை ஆஸ்தானம் (தர்பார்) என்று கூறுவார்கள்.

தொடர்ந்து உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதனை தொடர்ந்து புது பஞ்சாங்கம் படித்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் புத்தாண்டு பலன்களை தெரிவிப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு உகாதி பிரசாதம் வழங்கப்படும். யுகாதியை முன்னிட்டு முதல் நாள் 21ஆம் தேதி ஏழுமலையான் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்யும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும். அப்போது கோவில் கருவறை துவங்கி கோவிலில் உள்ள அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தம் செய்யப்படும்.

அதேபோல் பிரசாதம் தயாரிக்க கூடிய பாத்திரங்கள், பஞ்ச பாத்திரங்கள் என்று கூறப்படும் நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்படும்.

மேலும் மஞ்சள், சந்தனம், நாமக்கட்டி, ஜவ்வாது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் தயார் செய்யப்பட்ட நறுமண கலவை கோவில் சுகர்களுக்கு பூசப்படும்.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி கிடையாது. பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையானை வழிபடலாம். எனவே 21 ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் ஆகிய கட்டண சேவைகள் நடைபெறாது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், யுகாதி ஆகியவற்றை முன்னிட்டு 21, 22 ஆகிய தேதிகளில் பக்தர்கள் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.