உகாண்டா நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றார். அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இந்திய சமூகத்தினர் முன் உரையாற்றினார். அவர் பேசும்போது, புதிய இந்தியா உருமாற்றம் பெற்றது பற்றி குறிப்பிட்டார். இந்தியாவிற்கு எதிராக பல தசாப்தங்களாக, எல்லை கடந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சக்திகளுக்கு தற்போது உள்ள இந்தியா வேறுபட்டது என்றும் நாம் சரியான பதிலடி கொடுப்போம் என்றும் தற்போது தெரிந்திருக்கும் என பேசியுள்ளார். உரி அல்லது பாலகோட் என தேச பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொள்ளும் வேறுபட்ட இந்தியாவை மக்கள் இன்று பார்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டு உள்ளார். 2016-ம் ஆண்டு உரி பகுதியில் இந்திய ராணுவ தலைமையகத்திற்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தினர் ஊடுருவி தாக்குதல் நடத்திய நிகழ்வையும், 2019-ம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள பாலகோட் நகரில் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வையும் அவர் சுட்டி காட்டியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்தங்களை மீறி பெரும்படைகளை சீனா குவித்தது. ஆனால், இன்று இந்திய ராணுவம் மிக உயர்ந்த பகுதிகளிலும், குளிர் போன்ற கடினம் வாய்ந்த சூழ்நிலைகளிலும் குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். எனினும், சீன எல்லையுடனான உட்கட்டமைப்பை இன்னும் மேம்படுத்துவதற்காக நாம் கூடுதலாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் ஒப்பு கொண்டு உள்ளார்.