அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது. இவர்கள் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்துக்களை முடக்கினால், அவர்கள் பணியாற்ற மாட்டார்கள் என நிகழ்ச்சிகளுக்குத் தடை மற்றும் கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்களுக்கு மத்தியில், இந்த அரசு மீதுள்ள வெறுப்பு உணர்வால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும்.

உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். கும்பகோணத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை அறநிலையத் துறை செய்து தரவேண்டும். இங்குள்ள புனிதகுளமான மகாமக குளத்தை சுத்தமாவும், தூய்மையாகவும் வைத்திருக்கத் தவறினால், இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதில் உடன்பாடும் விருப்பமும் இல்லை. இந்து முன்னணிக்கும், அவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அறநிலையத் துறை நிர்வாகம், கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என பல ஆண்டாக வலியுறுத்தி வருகின்றோம். அறநிலையத் துறைக்கு என தனிவாரியம் அமைத்து, அதன்கீழ் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும்.

நீர் நிலைகள், கோயில் இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனே அகற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு செய்வதில்லை. தமிழகத்திலுள்ள பல கோயில் இடங்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாத தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மதச்சார்பற்ற அரசு எனக் கூறிக் கொண்டு தமிழக முதல்வர், இந்துக்களின் கூட்டத்திலோ, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிக்கை நாட்களில் வாழ்த்துகள் சொல்வது இல்லை. ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் மட்டும் சொல்கிறார்கள். எனவே, இந்த அரசு ஒருதலைபட்சமான அரசாக நடந்து கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.