அகில இந்திய அளவில் பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஜன.4-ம்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி ஆஷாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதிகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து தடை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பிளாஸ்டிக் தடை தொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், “பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு 14 விதமான முகாம்களை நடத்தி வருகிறது. பிளாஸ்டிக் தடை குறித்த இந்தமுகாம்களை கண்காணிக்க குழுஅமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்ஆசியாவின் மிகப்பெரிய மொத்த பழங்கள் மற்றும் காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாகபாரம்பரிய மஞ்சள் நிற துணிப்பைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேநேரம் பிரதமர் அறிவித்த பிரகதி திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் தடை குறித்த தகவல்களை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக அகில இந்திய அளவில்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்படும். எனவே, பிரதமர் தலைமையில் நடத்தப்பட்ட பிரகதி கூட்டத்துக்குப் பிறகு பிளாஸ்டிக்கை அகில இந்திய அளவில் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.3-ம்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.