புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் இருந்து நகரத்துக்கும், நகரப்பகுதிகளில் இருந்து ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகளில் உள்ள நிறுவனங்களுக்கும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிய சென்று வருகின்றனர்.
இதில், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் தங்கள் வாழ்வியல் தேவைக்காக வேலைக்கு சென்று ஈட்டும் வருவாயில், தினசரி பயணத்திற்கு என்று குறிப்பிட்ட ஒரு தொகையை செலவு செய்ய வேண்டியது இருக்கிறது. இது போன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டுதமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்துபயணத் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல் படுத்தப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்ட அறிவிப்பு வெளியானது. முதலில், ‘பட்டியலின பெண்களுக்கு மட்டும் புதுச்சேரி பேருந்துகளில் இலவச பயணம்’ என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
“இந்த விஷயத்தில் பாகுபாடு காட்ட வேண்டாம்; அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து பயணம்” என்று அறிவிக்கலாம் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதையும் ஏற்று, இத்திட்டத்தை அனைத்து பெண்களுக்கும் என முதல்வர் விரிவுப்படுத்தினார். ஆனால் அறிவிப்பு வெளியாகி 3 மாதங்களாகியும் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
பெண்கள் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, “முதலில் கிராமப் பகுதிகளுக்கு சரியாக பேருந்துகளை விட்டால் பரவாயில்லை. பலரும் கஷ்டப்படுகிறோம். அரசு பேருந்துகளே சரியாக இயங்குவதில்லை. பெரும்பாலும் தனியார் பேருந்துகள்தான் இயங்குகின்றன. அவைகளை நம்பியே பயணிக்க வேண்டியது உள்ளது.
இந்தச் சூழலில் எங்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், வெறும் அறிவிப் போடுதான் உள்ளது. அதேநேரத்தில் புதுச்சேரி, காரைக்காலை யொட்டிய தமிழக பகுதியில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. எங்கள் பகுதியை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களுக்குள் வந்து செல்லும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதை பார்க்கும் போது, ‘நமக்கும் இத்திட்டம் வராதா!’ என்று ஏக்கமாக இருக்கிறது” என்றனர்.
இது பற்றி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறுகையில், “15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த பேருந்துகளை இயக்கக் கூடாது என்ற உத்தரவால், பிஆர்டிசியில் இருந்த பல பேருந்துகளை நிறுத்தி விட்டோம். புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் முடிந்துள்ளது. அத்துடன் மின் வாகனங்களும் வாங்கவுள்ளோம்.
இவையெல்லாம் சரி செய்யப்பட்டு, அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை நடைமுறைப்படுத்த எளிதாக இருக்கும். தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பிஆர்டிசி நஷ்டத்தில் போய்விடும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். பேருந்துகள் வந்த பிறகுதான் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியும்.
இதற்கான கால அளவை குறிப்பிட்டு சொல்ல இயலாது. அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் இதை செய்து விடுவோம்” என்று தெரிவித்தார். அமைச்சர் கூறுவது போலவே நடப்பு சிக்கல்கள் களையப்பட வேண்டும்; அரசு போக்குவரத்து கழகமான பிஆர்டிசி புதுப்பொலிவு பெற வேண்டும்.
அதுவே நம் விருப்பமும் கூட. ஆனால், மேற்கண்ட சிக்கல்களையெல்லாம் களைந்து விட்டு,‘பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்’ என்று அறிவித்திருக்கலாமே! என்ற அங்கலாய்ப்பு இங்குள்ள ஒவ்வொருக்கும் ஏற்பட்டு வருகிறது. நல்ல ஒரு திட்டத்தை அறிவித்து, அதன் பயனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய செய்வதுதானே சரியான நிர்வாக நடைமுறையாக இருக்கும் என்ற எண்ணம் நமக்குள்ளும் எழுகிறது.