தாம்பரம் கிழக்கு பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டபோது, ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல எந்த வசதியும் செய்யப்படவில்லை.

கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாலம் வழியாக, கணபதிபுரம் உள்ளிட்ட கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

உயிரிழப்புகளை தவிர்க்க ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக, சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என, கோரிக்கை ஏழுந்தது. அதை ஏற்று ரயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் ரயில்வே மேம்பாலம் அருகில், கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

ஆனால், இந்த பாலம் ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் வகையில் ௮மைக்கப்படவில்லை. இதனால், மக்கள் ௮ந்த சுரங்கப்பாதையை சரிவர பயன்படுத்தவில்லை. தற்போது ௮ந்த சுரங்கப்பாதையானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. எனவே சுரங்கபாதையை ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் வகையில் மாற்றி சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கவுன்சிலர் ஜோதிகுமார் கூறியதாவது: பொதுமக்கள் மேற்கு தாம்பரம் செல்ல வேண்டுமெனில், இலகுரக வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்து ஏற்படுகிறது. மழை காலங்களில் சுரங்கப்பாதையை பயன்படுத்தவே முடியாது.

இதை தவிர்ப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இதனை மேற்கு தாம்பரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த சுரங்கப்பாதை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி கூறியதாவது: இரண்டு வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் நேரடியாக மேற்கு தாம்பரத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. மக்கள் தேவையை கவனத்தில் கொண்டு சுரங்கப் பாதை அமைக்கப்படவில்லை.

இந்தப் பாதையும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் வகையில் அமைக்கப்பட வில்லை. இதனால் இந்த இரண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டும் மக்களுக்கு போதிய பலன் இல்லாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது: கிழக்கு தாம்பரம் மக்கள் சுரங்க நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். சில மாதங்கள் முன்பு பல்வேறு காரணங்களுக்காக அந்த சுரங்கப்பாதை மூடப்பட்டது. தற்போது மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வே பாதையை கடக்கும் வகையில் உள்ள இந்த சுரங்கப்பாதையை, ஜி.எஸ்.டி சாலையையும் கடக்கும் வகையில் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமானது தான். இது அப்பகுதி மக்களின் முக்கிய தேவையாகும். இந்த சுரங்கப்பாதை நீட்டிப்பு அவசியமாக இருக்கிறது.

ஜி.எஸ்.டி சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், தேவை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு-விடம் வைத்திருக்கிறோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.