புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை 60 கி.மீ. ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் 24 விரைவு சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. அதோடு 18 விரைவு சாலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. இதில் தலைநகர் டெல்லியையும் நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையையும் இணைக்கும் விரைவு சாலை முக்கியமானது. கடந்த 2019 மார்ச் 8-ம் தேதி டெல்லி – மும்பை விரைவு சாலைக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இதன்படி டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவை இணைக்கும் வகையில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயில் 1,386 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

பல்வேறு பகுதிகளாக சாலை பணிகள் பிரிக்கப்பட்டு 23 தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அதிதீவிரமாக கட்டுமான பணிகள் நடைபெற்றன. கரோனா பெருந்தொற்று காலத்திலும் பணியில் சிறிதும் சுணக்கம் ஏற்படவில்லை. தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விரைவு சாலை போக்குவரத்துக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது நாட்டின் மிக நீளமான விரைவு சாலையாகும். இப்போது 8 வழிச் சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த விரைவுச் சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்த போதுமான இடவசதி உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலை போடப்பட்டிருப்பதால் அடுத்த 50 ஆண்டுகள் வரை சாலையில் எவ்வித சேதமும் ஏற்படாது என்று கட்டுமான நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

வாகனத்தை நிறுத்தினால் அபராதம்

சாலையின் 500 மீட்டர் தொலைவு இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல எந்த பகுதியிலும் வேகத் தடைகள் அமைக்கப்படவில்லை. மனிதர்கள், விலங்குகள் சாலையின் குறுக்கே செல்லாத வகையில் விரைவு சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். வேக கட்டுப்பாட்டை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும். எதிர்பாராதவிதமாக வாகனத்தில் பழுது ஏற்பட்டால் மட்டுமே சாலையோரம் நிறுத்தலாம். தேவையின்றி வாகனத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

சாலையின் 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் ஓய்வெடுப்பதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்த வேண்டும். அங்கு தங்கும் விடுதி, ஓட்டல், ஏடிஎம், மளிகை கடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். சாலையோரம் 93 இடங்களில் சிறாருக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் குறிப்பிட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவர். விரைவு சாலையின் ஒரு வழித்தடம் முழுமையாக மின்சார வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும். விரைவு சாலை முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

விலங்குகளுக்காக மேம்பாலம்

முகுந்தரா தேசிய பூங்கா, ரந்தம்பூர் தேசிய பூங்கா, சரிஸ்கா புலிகள் சரணாலயம், உள்ளிட்ட 5 உயிரியல்பூங்காக்களை விரைவு சாலை கடந்துசெல்கிறது. இந்த இடங்களில் விலங்குகள் பாதுகாப்பாக கடந்து செல்ல ஆசியாவிலேயே முதல் முறையாக செடி, கொடிகள், மரங்கள் நிறைந்த மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் ராஜஸ்தானின் முகுந்தரா தேசிய பூங்காவில் 4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதியில் மரங்கள் நடப்பட்டு வனப்பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இயற்கை சூழலில் எவ்வித ஆபத்தும் இன்றி விலங்குகள் கடந்து செல்ல முடியும்.

இப்போது டெல்லியில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக செல்ல 24 மணி நேரமாகிறது. விரைவு சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு 12 மணி நேரத்தில் டெல்லியில் இருந்து மும்பை சென்றடையலாம்.

டெல்லி-மும்பை விரைவு சாலை குறித்து தேசிய நெடுஞ்சாலை வட்டாரங்கள் கூறியதாவது. இந்த விரைவு சாலையை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைப்பார். வாகனத்தின் பேனட்டில் தண்ணீர் டம்ளரை வைத்து விட்டு 120 கி.மீ. வேகத்தில் சென்றால் கூட தண்ணீர் சிந்தாது. அந்த அளவுக்கு உலகத் தரத்தில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

உலகளாவிய அளவில் மிக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட விரைவு சாலை என்ற பெருமையையும் டெல்லி-மும்பை விரைவு சாலை பெறுகிறது. சாலை கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.

விரைவு சாலையோரம் சிறுவர் பூங்கா, ஓட்டல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் வரும் டிசம்பரில் நிறைவடையும்.

இவ்வாறு தேசிய நெடுஞ்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை – சூரத் விரைவு சாலையுடன் இணைப்பு

தமிழக தலைநகர் சென்னை, குஜராத்தின் வர்த்தக தலைநகரான சூரத்தை இணைக்கும் வகையில் 1,450 கி.மீ. தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த விரைவு சாலையின் கர்நாடக திட்டப் பணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் விரைவு சாலை பணிகள் தற்போது வேகம் பெற்று வருகிறது. இந்த சூழலில் குஜராத்தின் சூரத் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் டெல்லி-மும்பை விரைவு சாலையுடன் சென்னை-சூரத் விரைவு சாலை இணைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.