“உயர் நீதிமன்றத்தில் சுவாதீனங்கள் குறித்து வாதங்கள், ஆவணங்கள், முன்வைக்கப்படாத சூழ்நிலையில் வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரங்களை நீதிமன்றம் தனது அதிகாரமாக பயன்படுத்தியுள்ளது. எனவே, இந்த தீர்ப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. இது மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு” என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீரப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் தீர்ப்பளித்தது.

மேலும், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது என்றும், தேவையான பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு பகுதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, தலைமை கழகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டப்பிரிவு 145 மற்றும் 146-ன் கொடுக்கப்பட்ட அறிவிப்பு செல்லாது என்றுதான் இந்த வழக்கில் வாதங்கள் முக்கியமாக எடுத்து வைக்கப்பட்டது. சுவாதீனம் யாரிடத்தில் உள்ளது என்பது குறித்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-ன் கீழ் 9 பிரிவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாதீனம் யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுத்து, அதன்படி சீலை அகற்றி, சுவாதீனத்தை ஒப்படைக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் சுவாதீனங்கள் குறித்து, வாதங்கள், ஆவணங்கள், முன்வைக்கப்படாத சூழ்நிலையில் வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரங்களை நீதிமன்றம் தனது அதிகாரமாக பயன்படுத்தியுள்ளது. எனவே, இந்த தீர்ப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. இது மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு.

மேலும், இந்த உத்தரவின் இறுதியில் நீதிபதி, இபிஎஸ் தரப்பினரிடம் வருவாய் கோட்டாட்சியர் சாவியை ஒப்படைத்தாலும், இன்றைய தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு, இபிஎஸ் தரப்பு கட்சித் தொண்டர்கள் யாரும் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதில் ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் உள்ளது தெளிவாகிறது. எனவேதான் ஒரு மாத காலத்திற்கு அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்திற்கு சுவாதீனம் தொடர்பாக முடிவெடுக்க கூடிய அதிகாரம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், குறிப்பாக இந்தக் குற்ற வழக்கில் கிடையாது. நிச்சயமாக மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு. பகுதியாக எங்களது மனுவை அனுமதித்து, சாவியை ஒப்படைக்க கூறியிருப்பது சட்டத்திற்கு எதிராக உள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், உரிமையியல் நீதிமன்ற அதிகாரங்களை உயர் நீதிமன்றம் தனது கையில் எடுத்து இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது” என்று அவர் கூறினார்.