ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. குறிப்பாக தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் கூடுதல் லாபம் ஈட்டி வருகின்றன.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு வரி விதித்துள்ளது. ஏற்றுமதியாகும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரியும் டீசல் லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,230 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

புதிய வரியால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது கிடைத்து வரும் லாபத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 12 டாலர்கள் வரை லாபம் குறைந்தது. இந்தநிலையில் புதிய வரியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்வு கண்டன. பிஎஸ்இயில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.25 சதவீதம் உயர்ந்து ரூ.2,545.05 ஆக இருந்தது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி பங்குகள் 7 சதவீதம் உயர்ந்து ரூ.136.40 ஆக இருந்தது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 11.38 சதவீதமும், ஆயில் இந்தியா 8.82 சதவீதமும், மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் பங்குகள் 4.95 சதவீதமும் உயர்ந்தன.