வேற்றுமையை வேற்றுமையாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது” என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பெருநிறுவன ஆளுகை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆசிர்வாதம் ஆச்சாரி உட்பட பலர் பேசினர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சிறப்புரையில் கூறியது: “தேசிய கல்விக் கொள்கை என்பது பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் கொள்கையாகும்.

உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது 40% இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டவர் இங்கிருந்து கொண்டு போய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டு சேர்த்தனர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தில் உள்ளீடாகக் கொண்டு செயல்பாட்டில் இருந்த கல்விக் கொள்கையை 75 ஆண்டுகளுக்கு பிறகு சீர் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியா என்கின்ற பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. ஆனால் சமீபகாலமாக வேற்றுமையை வேற்றுமையாக பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் நலன் பயக்கும் வகையில் திட்டங்களை வகுக்கின்றனர். அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துவதால் அதன் இலக்கை அடைய முடிவதில்லை. இந்த தேசிய கல்விக் கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கம் இது குறித்த தெளிவை உருவாக்க அடித்தளமாக அமையும்” என்றார். தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும், எளிமையாகவும் நடைமுறைப்படுத்துவது குறித்த செயல் திட்டம் வகுப்பது குறித்து இந்தக் கருத்தரங்கில் ஆலோசனை நடைபெறுகிறது.

தொடக்க விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் இதில் பங்கேற்ற துணைவேந்தர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசினார்.

இந்த விழாவில், முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது என்பது கவனிக்கத்தக்கது.