தமிழகத்தில் சென்னை, நாகர்கோவில், உதகையைத் தவிர மற்றஇடங்களில் மொத்தம் 4,700 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 1,500 பேருந்துகள் நகரப் பேருந்துகளாகும்.
தற்போது ஊரடங்கு தளர்வுஅளிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, தமிழகமுதல்வரின் உத்தரவின்பேரில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி முதல் பேருந்துகளில் பெண்களுக்கு அடையாள பயணச்சீட்டு வழங்கப்பட்டு வரு கிறது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகைத் திட்டம் மூலம் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு நகரப் பேருந்துகளில் 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசுப் பேருந்துகளில் இதுவரை சுமார் ஒரு கோடி பேர் கட்டணமின்றிப் பயணம் செய்துள்ளனர்” என்றனர்.
தமிழ்நாடு தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தர்மராஜ் கூறும்போது, “ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், கடந்த 1-ம் தேதி முதல் தனியார் பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், கரோனா அச்சம் இன்னும் இருப்பதால், பயணிகள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. முழுஅளவில் தனியார் பேருந்துகளும்இயங்கவில்லை. அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் பெண் பயணிகள் வருகை 25 சதவீதம் குறைந்துள்ளது.
மற்றொருபுறம், சொந்த வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள்மீண்டும் பேருந்து போக்குவரத்துக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுப் போக்குவரத்து வசதியைப் பாதுகாக்க தமிழக அரசு டீசல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
#MetroPeople #News #Bus #Tamilnadu #NewsUpdates