பெட்ரோலிய பொருட்கள் மீது வசூலிக்கப்படும் கலால் வரி மூலமான வருவாய் நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே கால கட்டத்தில் வசூலான தொகையை விடவும் 48 சதவீதம் அதிகமாகும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் கணக்குகள் நிர்வகிப்பு பிரிவின் புள்ளிவிவரங்கள்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது வசூலிக்கப்படும் கலால் வரி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது.

இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.67,895 கோடியாக இருந்தது. இதன்மூலம் 48 சதவீதம் கூடுதலாக வரி வருவாய் அரசுக்குக் கிடைத் துள்ளது. அதாவது கூடுதலாக கிடைத்துள்ள வரி வருவாய் மட்டுமே ரூ.32,492 கோடியாகும். இந்தக் கூடுதல் வருவாயானது, எண்ணெய் பத்திரங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10 ஆயிரம் கோடியைக் காட்டி லும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலை மையிலான அரசு ரூ.1.34 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டது. இதில் ரூ.3500 கோடி மட்டுமே அசல் செலுத்தப்பட்டுள்ளது. மீத முள்ள தொகையும், அதற்கான வட்டியும் ரூ.1.5 லட்சம் கோடிநிலுவை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத்தொகை 2025-2026 நிதி ஆண்டுக்குள் செலுத்தப்பட வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டில் மட்டும் அந்த எண்ணெய் பத்திரங்கள் மீது வழங்க வேண்டிய தொகை ரூ.10 ஆயிரம் கோடி என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023-24ல் ரூ.31,150 கோடியும், 2024-25ல் ரூ.52,860.17 கோடியும், 2025-26ல் ரூ.36,913 கோடியும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விலை உயர்வு

கரோனா நெருக்கடி காலத்தில்பெட்ரோல், டீசல் ரூ.100ஐ கடந்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் மத்திய அரசின் மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனங்களை எழுப்பிவருகின்றன.

ஆனால், பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சியில் வெளியிட்ட எண்ணெய் பத்திரங்கள்தான் எனநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், எண்ணெய் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்க் புரியும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையிலும், பெட்ரோல், டீசல் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருவது கரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கியிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வரு வதை காட்டுகிறது.

மேலும் கடந்த ஆண்டில் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை அரசு கணிசமாக உயர்த்தியது. கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.98லிருந்து ரூ.32.90ஆகவும், டீசல் மீது ரூ.15.83லிருந்து ரூ.31.8ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் கலால் வரி மூலமான அரசின் வருவாய் அதிகரித்துள்ளது.