மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோரிவாரிசுகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள், பணிக் காலத்தின்போது இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வாரிசுதாரர்கள், தங்களது தந்தை அல்லது தாய்பணிபுரிந்த மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு வாரிசுதாரர்களின் கல்வி, வயது, வாரிசுரிமை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர், அவற்றின் உண்மைத்தன்மையை அறிய, வாரிசுதாரர்கள் படித்த கல்வி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்க்கப்படும். பின்னர், வேலை வழங்க தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.
இந்த நடைமுறையால் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, வாரிசு வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட் டுள்ளது.
இதன்படி, விண்ணப்பங்கள் மீது உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சான்றிதழ்களை சரிபார்ப்பதிலும் புதிய நடைமுறையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்த பிறகு கல்விச் சான்றிதழ் போலி என தெரியவந்தால், பணி நீக்கம் செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர்.