தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு மற்றொரு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
அதேபோல், ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் ஊழியர்களும் 3 ஆண்டுகள் மட்டுமே அந்த துறையில் பணியாற்ற முடியும். அதன் பிறகு அவர்கள் தாய் துறைக்கே பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
அந்த வகையில் இந்த ஆண்டும்வழக்கம்போல் சில துறைகளில் பணியிட மாற்றம் நடைபெறுகிறது. பிற துறைகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஊழியர்கள் 3 ஆண்டு அயல்பணி முடிந்து தாய் துறைக்கு மாற்றப்படும்போது, வேறு இடத்துக்கு பணியிட மாற்றமும் செய்யப்படுகின்றனர்.
கரோனா காலத்தில் நடைபெறும் இந்த மாற்றத்தால், அரசுத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பாதிப்படைகின்றனர். கரோனா தொற்று காலத்தில்குடும்பத்தினருடன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறிச் செல்வதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனால், இன்னும் ஓராண்டுகாலத்துக்கு தாங்கள் பணிபுரியும் துறையிலேயே அல்லது இடத்திலேயே தங்களது பணியை தொடரஅனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருசில துறைகளில், அயல்பணியில் உள்ள ஊழியர்கள் அங்கேயே மேலும்ஓராண்டுக்கு பணியை தொடருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஒவ்வொரு துறையாக நடவடிக்கை எடுப்பதை விட, தமிழக அரசு எல்லா துறைகளுக்கும் பொருந்தும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டால் நல்லது என்று மாற்றுத் திறனாளி அரசுஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.