தமிழகத்தில் முதலீட்டாளர்களை அதிக அளவு ஈர்க்கும் வகையில், தகவல் தொழில்நுட்பக் கொள்கை யில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,618 கிராம பஞ்சாயத்துகளிலும் இணைய இணைப்பை பரவலாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிராமங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிபிஓ நிறுவனங்களை தொடங்க முடியும். இதுதவிர, நகர்ப்புறங்களில் இணைய சேவை இருந்தாலும் தடையின்றி இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மட்டுமின்றி தென்மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை கொண்டுவர அரசுமுயற்சி எடுத்து வருகிறது. இதற்காக அதிக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் படிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் கடமை அரசுக்கு இருப்பதால், அதற்கேற்ப தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.