கரோனா காரணமாக கொடைக் கானலில் 2-வது ஆண்டாக கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு செய்து இதற்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் பூக்களை வீட்டி லிருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை களைகட்டும். சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்க அரசு கோடைவிழா, மலர் கண்காட்சி ஆகியவற்றை ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் நடத்தும்.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கு வதற்கு முன்னரே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதை யடுத்து இந்த ஆண்டு கரோனா இரண்டாவது அலை காரணமாக கொடைக்கானல் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டது.

தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட பூச்செடிகளான சால்வியா, டெல்பீனியம், ஆன்ட்ரினியம், பேன்சி, பெட்டுனியா, லில்லியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதே போன்று ரோஸ் கார்டனில் சன் கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ப்யூம், டிலைட், ஈபிள் டவர், கிலோட்கிஸ் அப் பையர் உள்ளிட்ட 1500 வகையான ரோஜா வகைகளில் 16,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. செட்டியார் பூங்காவிலும் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் நேரில் வரமுடியாத நிலையில் இவற்றை ஒளிப்பதிவு செய்து யூடியூப் சேனல் (Parks and Gardens – Kodaikanal) மூலம் மக்கள் காண்பதற்கு தோட்டக் கலைத்துறையினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன் கூறிய தாவது: பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், செட்டியார் பூங்கா ஆகியவற்றில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்கள் படம் பிடிக்கப்பட்டு யூ டியூப் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலில் உள்ள மூன்று பூங்காக்களையும் பறவை பார்வையில் டிரோன் மூலம் வீடியோ எடுத்து காட்சிப்படுத்தியுள்ளோம். இதனை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம் என்றார்.