ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி – வினா போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம் என, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று (ஜூன் 25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த சத்யன், சரத், கமல், பவானிதேவி, கணபதி, வருண் அ. தக்கர், நேத்ராகுமணன் ஆகிய வீரர்கள்/வீராங்கனைகள் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கரோனா பெருந்தொற்று காலத்திலும் மிக உயர்ந்த விளையாட்டான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள நமது தமிழக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் முன்போ அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களை தேர்வு செய்து, ஜூலை 22-ம் தேதி வரை ‘ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட்’ ஏற்படுத்தி, மக்களுக்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி – வினா போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. Road to Tokyo-2020 என்ற தலைப்பில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி – வினா போட்டிகள் https://fitindia.gov.in என்ற இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த வினாடி – வினா போட்டியில் 120 வினாடிகளுக்குள் பதிலளிக்கும் வகையில், ஒலிம்பிக் குறித்த வரலாறு, ஒலிம்பிக் விளையாட்டில் அடங்கியுள்ள விளையாட்டுப் பிரிவுகள், வீரர்கள், விளையாட்டு வீரர்களின் முந்தைய மற்றும் தற்போதைய சாதனைகள், உலக அளவில் படைக்கப்பட்ட சாதனைகள் குறித்த 10 கேள்விகள் கேட்கப்படும்.

இணையதளம் மூலம் ஒரு நபர் ஒரே முறை மட்டுமே ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி – வினா போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியாளர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்றால் குறைந்த வினாடிகளில் பதிலளித்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டி-ஷர்ட் பரிசாக வழங்கப்படும். எனவே, விளையாட்டில் ஆர்வமுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ள ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி – வினா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லலாம்”.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.