வாஷிங்டன்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக  பைடன் பொறுப்பேற்க உள்ளார்.


ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.  இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் சூழலில், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.  பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.


தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அறிவிக்கும் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.


இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவரும் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் இன்று தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.


இதனை அடுத்து நடைபெற்ற தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையில் 306 வாக்குகளை பெற்று ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக  அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை துணை ஜனாதிபதி  மைக் பென்ஸ் வழங்கினார். இதன் மூலம் வரும் 20 ஆம் தேதி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதனிடையே தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ஜானாதிபதி டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், “தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மிகச்சிறந்த முதலாவது பதவிக்காலத்தின் முடிவை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் வேளையில், அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மீண்டும் ஆக்குவதற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்,” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அடுத்த திருப்பமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான மாகாணமான ஜார்ஜியாவில் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.


ஏற்கெனவே, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், ஜார்ஜியா தேர்தல் முடிவுகளால், செனட் சபை குடியரசுக் கட்சிக்குச் சென்றுவிடுமோ என்ற குழப்பம் இருந்தது.


ஆனால், ஜார்ஜியாவில் நடந்த மறு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ரபேல் வார்னாக், ஜான் ஓஸாப் ஆகிய இருவரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் கெல்லி லியோப்லர், டேவிட் பெர்டியு ஆகியோரைத் தோற்கடித்தனர்.


இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் 100 இடங்களில் 50:50 என்ற சரிவிகிதத்தில் உள்ளனர். ஏதாவது ஒரு முக்கிய மசோதாவில் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போது, துணை அதிபராகப் பதவி ஏற்க உள்ள கமலா ஹாரிஸ் அளிக்கும் வாக்கு பெரும்பான்மையை முடிவு செய்யும். இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அடுத்த பின்னடைவாக அமைந்துள்ளது.


கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு துணை அதிபராகப் பதவி ஏற்க இருப்பதால், அவரின் வாக்கு நிச்சயம் ஜனநாயகக் கட்சிக்குத்தான் இருக்கும் என்பதால், செனட் சபையில் பெரும்பான்மையுடன் ஜனநாயகக் கட்சி செயல்படும்.


இதன் மூலம் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும், செனட் சபையிலும் பிரச்சினையின்றி நிறைவேற வழி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிபராகப் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோ பைடன் எதிர்காலத்தில் எந்த மசோதாக்களையும் சிக்கலின்றி நிறைவேற்ற முடியும்.


ஆனால், ஒருவேளை ஜார்ஜியாவில் குடியுரசுக் கட்சி வென்றிருந்தால், செனட் சபையில் பெரும்பான்மையுடன் அமர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் இடையூறு ஏற்படுத்தி, ஜோ பைடனுக்குத் தலைவலியை ஏற்படுத்துவார்கள். அதிலிருந்து ஜோ பைடன் தப்பித்துள்ளார்.


ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ரஃபேல் வார்னாக், ஜான் ஓஸாப். ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ரஃபேல் வார்னாக், ஜான் ஓஸாப் இருவரும் பெற்ற வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


ஏனென்றால், 51 வயதாகும் ரஃபேல் வார்னாக் அட்லாண்டாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து, மனித உரிமை ஆர்வலராகவும் இருந்து வருகிறார். ஜார்ஜியா மாகாண வரலாற்றிலேயே செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் இருந்து செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அமெரிக்கர் என்பதும் கவனிக்கத்தக்கது.


மற்றொரு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் ஓஸாப், ஜார்ஜியாவில் இருந்து செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் யூதர் என்பது குறிப்பிடத்தக்கது. 33 வயதாகும் ஜான் ஓஸாப் செனட் சபைக்கு இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார்.