பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபால் (59) என்பவர் மீது புகார் எழுந்தது. ஆன்லைன் வகுப்பில் துண்டு மட்டும் அணிந்து வகுப்பு எடுத்ததும், மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார். ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்தது. ஆசிரியர் ராஜகோபாலை போலீஸார் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

இதையடுத்து போலீஸார் நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை. அவரது செல்போன், லேப்டாப்புகளை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் நேற்றிரவு இந்து காலனி நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ ( 12 of POCSO Act 2012.r/w 11(i)(ii) (iii )(iv).354(A)509 IPC 67.67A of IT Act) உள்ளிட்ட ஐபிசி சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராஜகோபால்

அவரைக் கைது செய்த அனைத்து மகளிர் போலீஸார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் இன்று காலை மகிளா நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதின் பேரில் ஆசிரியர் ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

“சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் கைதாகியுள்ளார். அந்த ஆசிரியர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும்.

ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். அதை யாரும் பின்பற்றவில்லை என்பது, இதைப் பார்க்கும்போது தெரிகிறது. அந்த வழிமுறைகளை மீண்டும் வலியுறுத்துவோம்.

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனியாகக் குழு அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். இம்மாதிரியான புகார்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்க வேண்டும். நல்லாசிரியர்கள் மீதும் தேவையில்லாத புகார்கள் வந்துவிடக் கூடாது. கமிட்டி அமைத்து புகார்கள் பெறப்படும்.

இம்மாதிரியான சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கே ஒரு பாடம். இம்மாதிரியான புகார்களை ஏற்கெனவே கல்வி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம் எனப் பல முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் இதற்கென ஒரு கமிட்டி அமைக்க வேண்டும், அதில், பெண் ஆசிரியர் இருக்க வேண்டும். இந்தக் குழு எல்லா பள்ளிகளிலும் உள்ளதா எனக் கண்காணிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவிக்க யாரும் பயப்பட வேண்டாம், அவர்களின் ரகசியத்தன்மை காக்கப்படும் என, இவ்வழக்கை விசாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஜெயலட்சுமியும் சொல்லியிருக்கிறார். எனவே, அச்சப்படாமல் புகார் அளிக்க வேண்டும்”.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பின்னணி என்ன?

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராஜகோபாலன். அவர் மீது மாணவி ஒருவர் எழுப்பிய பாலியல் புகாரை முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். வகுப்பில் அவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்கு சென்றதாகவும், இதுகுறித்து துறைத்தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி அந்தப் பள்ளிக்கு நேற்று மதியம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஆசிரியர் ராஜகோபாலனை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.