சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரசை விட தற்போது பரவி வரும் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் தினசரி பாதிக்கப்படும் நோயாளிகளில் 60 சதவீதம் பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் தினமும் 400 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தினமும் கொரோனா நோயாளிகளுக்கு 400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனும் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் கொரோனாவால் முடங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்

இவர்களில் 60 சதவீதம் பேர் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவதால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உதவியுடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, மத்திய அரசிடம் தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை போதுமான அளவுக்கு தயார் செய்து அனுப்பி வைக்க கேட்டு இருந்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து 40 நாடுகள் நமது நாட்டுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளன.

அந்த வகையில் தமிழகத்துக்கு மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில் விமானத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லண்டனில் இருந்து எகிப்து வழியாக இந்திய விமானப்படை விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தன. இவை ஒவ்வொன்றும் 65 கிலோ எடை கொண்டவை.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்

இதன் மூலம் 29 ஆயிரத்து 250 கிலோ ஆக்சிஜன் சிலிண்டர்கள் மத்திய அரசின் தொகுப்பில் இருந்த சிறப்பு விமானம் மூலம் தமிழகத்தை வந்தடைந்துள்ளன. சுங்க துறை அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளியில் கொண்டு செல்வதற்கான சான்றிதழ்களையும் உடனடியாக வழங்க நடவக்கை எடுத்தனர்.

இதன்படி 15 நிமிடத்துக்குள் அதற்கான கிளியரன்ஸ் அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்த சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன. 450 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து சிலிண்டர்கள் அனைத்தும் தமிழக சுகாதார துறை அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவைப்படும் அளவுக்கு இந்த ஆக்சிஜனை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.