திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அதை வழங்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி  தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஒருவருக்கு எதிராக புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்நபரை கைது செய்தனர். கடந்த மாதம் 5ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கைதான நபர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அந்த நபர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

காலம் தாழ்த்தி இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புகார்தாரருக்கும் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

 

சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

ஆர்ய சமாஜ் அமைப்புக்கு திருமணச் சான்றிதழ் அளிக்கும் உரிமை கிடையாது. அது அந்த அமைப்பின் வேலையல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத்தான் அதற்கான அதிகாரம் உள்ளது. ஜாமீன் மனுவை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக, சிறப்புத் திருமணச் சட்டம், 1954ன் படி, ‘ஆர்ய சமாஜ்’ திருமணங்களை நடத்தி அங்கீகரிக்கலாம் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ‘மத்திய பாரத் ஆர்ய பிரதிநிதி சபா’ தாக்கல் செய்த மனுவை விசாரித்து அந்த உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், இந்த மனு மீது மத்தியப் பிரதேச அரசிடம் பதில் கேட்டு இருந்தது.