6,000 பேரை உதயசூரியன் சின்னம் வடிவில் நிறுத்தி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியினர் 6,000 பேரை இன்று (பிப்.16) காலை, ஒரே இடத்தில் ‘உதயசூரியன்’ வடிவத்தில் நிறுத்தி, ‘உதயசூரியன் – உலக சாதனை’ – ‘மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் சின்னம் உதயசூரியன்’ எனும் ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பெறும் நிகழ்ச்சி, சென்னை கொட்டிவாக்கம் பகுதியிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது.
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதாவது:
“உலக சாதனை படைக்கும் வகையில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள்.
விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், 234 இடங்களில் 200 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். ஆனால், பிரச்சாரத்தை மேற்கொள்கிறபோது, மக்களிடத்தில் காண்கின்ற எழுச்சியும் அந்த ஆர்வமும், ஆரவாரமும் 200 அல்ல, 234-க்கு 234 இடங்களிலும் நிச்சயமாக திமுக அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
தேர்தலில், இந்திய அளவில், ஏன் உலக அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.