சென்னை: அக்னிபாத் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்கள் இளைஞர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி “இந்திய ராணுவத்தில் இளைஞர் சமுதாயத்திற்கு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் தேசிய தலைமைக்கு நன்றி” என்று அக்னிபாத் திட்டத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அக்னிபாத் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” அக்னிபாத்’ திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும்.இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுநர் பங்கேற்பதற்கு இடம் இல்லை” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.