கரோனா வைரஸ் பரவிய பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சுமார் 25 எம்.பி.க்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத் தொடர் திட்டமிட்ட 17 நாட்களுக்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அதே வகையில் இந்த ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. மழைக்கால கூட்டத்தொடரைப் போலவே இத்தொடரிலும் கரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக, மாநிலங்களவை காலையிலும், மக்களவை மதியத்திலும் நடைபெற்றன. இச்சூழலில் எம்.பி.க்கள் எவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

நாடாளுமன்ற அலுவலர்களில் 5 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின்போது (மார்ச்8 முதல் ஏப்ரல் 8 வரை) ஒரேநேரத்தில் இரு அவைகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் நாடாளுமன்ற மூத்தஅலுவலர்கள் வட்டாரம் கூறும்போது, “பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பெரும்பாலான எம்.பி.க்கள் கரோனா கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளவில்லை.

டெல்லியிலும் கரோனா பரவல் சூழல் வெகுவாகக் குறைந்து வழக்கம்போல் திறக்கப்பட்ட பள்ளிகளிலும் பாதிப்பு இல்லை. எனவே, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு வழக்கம்போல நடைபெறும். எனினும் மிகச்சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்படும்.

இதில், பார்வையாளர்கள் மற்றும் எம்.பி.க்களின் உதவியாளர்களுக்கான அனுமதி ரத்து தொடரும். இதற்கான இறுதி முடிவு சில தினங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்” என்றனர்.